Tuesday 30th of April 2024 02:06:12 PM GMT

LANGUAGE - TAMIL
பிக்பாஸ் 3 – நாள் 24 –  “யார் மனசுல யாரு..  பிக்பாஸ பாரு”

பிக்பாஸ் 3 – நாள் 24 – “யார் மனசுல யாரு.. பிக்பாஸ பாரு”


லொஸ்லியா ஆர்மியைச் சேர்ந்த வாலிப வயோதிபர்கள் இன்று நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள். ஆம். கவினுக்கும் தனக்கும் இடையில் காதல் எதுவும் கிடையாது என்கிற அதிமுக்கிய வரலாற்று விஷயத்தை இன்று லொஸ்லியா அறிவித்து விட்டார். பட்டிமன்றத்தின் வழியாக பிக்பாஸ் செய்த கலகத்தினால் இந்த உண்மை இன்று பீறிட்டுக் கொண்டு வெளியே வந்தது.

என்றாலும் யார் யாரை காதலிக்கிறார்கள் என்கிற விஷயம் இன்னமும் கூட பூடகமாக இருக்கிறது. காதல், நட்பு ஆகிய இரு உணர்வுகளின் இடையில் பிக்பாஸ் இளைஞர்கள் பயங்கரமாக விளையாடுகிறார்கள். விவேக் ஒரு நகைச்சுவைக் காட்சியில் சொல்வார். “சென்னை ஆட்டோக்காரங்களைப் பத்தி என்ன நினைச்சே.. லெப்ட் இண்டிகேட்டர் போட்டு.. ரைட்ல கை காண்பிச்சுட்டு நேராப் போய் டிராபிக் கான்ஸ்டபிளையே கன்ப்யூஸ் பண்ணுவோம்டா நாங்க” என்று. இந்தக் காமெடியை விடவும் பிக்பாஸ் வீட்டு சமாச்சாரங்கள் குழப்பமாக இருக்கின்றன.

**

திருப்பள்ளியெழுச்சிப் பாடலான ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு’ முடிந்தும் மோகன் காலையிலேயே தன் பஞ்சாயத்தை துவங்கி விட்டார். ‘டிக்டிக்டிக்’ டாஸ்க்கின் போது மீரா எடுக்க வந்த கடிகாரத்தை சாண்டிதான் தட்டி விட்டு எடுத்தான். காமிரால நல்லா தெரிஞ்சது” என்பது போல் சொல்லிக் கொண்டிருந்தார். இந்த எலி ஏன் அம்மணமாக ஓடுது என்று தெரியவில்லை. மீராவிடமும் உம்மா வாங்க வேண்டுமென்று முடிவு செய்து விட்டாரோ, என்னமோ.

லொஸ்லியா நேற்று அப்செட் ஆனதற்கு உண்மையான காரணம் என்னவென்று இன்று தெரியவந்தது. அவர் சேரனிடம் இதைப் பற்றி விரிவாக ‘கதைத்திருக்கிறார்’. அதாகப்பட்டது… சாக்லெட் பஞ்சாயத்து விஷயமாக லொஸ்லியாவும் கவினும் நேற்று பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று கவின் சொன்னார். “இங்க வெயிலா இருக்கு.. மேக்கப் கலைஞ்சுடப் போகுது. உள்ளே போ”.

இந்த விஷயத்தை லொஸ்லியா எவ்வாறாகப் புரிந்து கொண்டார் என்றால், சாக்ஷி அந்தப் பக்கம் வந்ததால், அவள் தங்களைப் பார்த்து விடக்கூடாது என்பதற்காக கவின் தன்னை அவாய்ட் செய்கிறான்’ என்று. இந்த விஷயம் தர்ஷனின் வழியாக கவினின் காதுக்கு பிறகு வந்து சேர்ந்தது. அவருடைய ரியாக்ஷன் “அய்யோ.. நான் அதை இயல்பாத்தான் சொன்னேன்.. இப்படியா அவ புரிஞ்சுக்கிட்டா.? கடவுளே!”

IMAGE_ALT

அது பழுதா அல்லது பாம்பா என்று தெரியாத அளவிலேயே ஓர் உறவை தொடர்ந்து கையாளக்கூடாது. இது இரு பாலருக்கும் பொருந்தும். கவின் தொடர்ந்து செய்து கொண்டிருந்தது இதைத்தான். ஆனால் கவின் மீது மட்டும் குற்றம் சொல்ல முடியாது. லொஸ்லியா பழகிய விதமும் அப்படித்தான் இருந்தது. கவின் சாப்பிட்ட மிச்ச ஐஸ்கீரிமை வாங்கி தான் உண்பது.. நட்பா.. காதலா?

என்றாலும் மற்றவர்களின் உறவில் பிரச்சினை ஏற்பட தான் எந்த அளவிலும் காரணமாகி விடக்கூடாது என்கிற லொஸ்லியாவின் நுண்ணுர்வும் நாகரிகமும் பாராட்டத்தக்கது.

**

லக்ஸரி டாஸ்க்குக்கான ‘டிக்டிக்டிக்’ விளையாட்டு மறுபடியும் தொடர்ந்தது. இந்த முறை அபிராமியும் கவினும் சென்றார்கள். அவர்கள் அலார்ம் அடித்துக் கொண்டிருக்கும் 15 கடிகாரங்களை நிறுத்த வேண்டும். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களால் டாஸ்க்கை முடிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடைக்கவில்லை. அடுத்து சென்ற சாக்ஷி – தர்ஷன் அணிக்கும் இதேதான் நிலைமை.

இந்த டாஸ்க்கில் ஓர் ஒழுங்கின்மை இருந்தது. முதலில் சென்ற அணிக்கு 2 அலாரங்கள் மட்டும் தரப்பட்டன. அடுத்தடுத்து சென்ற அணிகளுக்கு கூடுதல் அலாரங்கள் தரப்பட்டன. அதற்கேற்ற நேரமும் புள்ளிகளும் உயர்த்தப்பட்டிருந்தாலும் விளையாடும் நபர்களின் எண்ணிக்கை இரண்டு மட்டுமே. இரண்டே அலாரங்கள் என்பதால் சாண்டி இதை எளிதாக முடித்து விட்டார். (அதில் ஒன்று மீராவிடமிருந்து பிடுங்கியது என்கிறார்கள்). ஆனால் மற்றவர்களால் இதை எளிதில் முடிக்க முடியவில்லை. எனவே கடைசி இரண்டு அணிகளுக்கும் புள்ளிகள் ஏதும் கிடைக்கவில்லை. இந்த ஒழுங்கின்மையைப் பற்றி யாரும் பேசவில்லை.

IMAGE_ALT

இந்த லட்சணத்தில் சாக்ஷி டீம் கும்பலாகப் போய் புகையறைக்குள் உட்கார்ந்ததால் நூறு புள்ளிகளை பிக்பாஸ் அபராதமாகப் பிடுங்கிக் கொண்டார். இப்படியொரு விதி இருப்பதே இன்றுதான் தெரிந்தது. இதுநாள் வரை பெண்கள் வம்பு பேச வேண்டுமென்றால் இதற்குள்தான் கும்பலாக புகுந்து கொள்வார்கள். பெண்கள் புகை பிடித்து கெட்டழிகிறார்களே என்கிற கவலையெல்லாம் பிக்பாஸூக்கு இல்லை. அவர்கள் பேசுவதை தெளிவாக காட்ட முடியவில்லையே என்கிற கவலை மட்டும்தான் இருந்திருக்கும். தனித்தனியாகச் செல்லலாமாம். ஒரு கேப்டனாக இருந்தும் புள்ளிகள் குறைவதற்கு காரணமாக இருந்த சாக்ஷி சபையில் பொது மன்னிப்பைக் கோரினார்.

**

ஆடி மாதம் பிறந்து விட்டதாலோ என்னமோ, காதல் ஜோடிகளை பிரித்து தனித்தனியாக அமர வைக்கும் ‘கலாசார’ திட்டத்தை பிக்பாஸ் யோசித்தார். ஒரு பட்டிமன்றத்தின் வழியாக இந்தக் கலகத்தை கச்சிதமாகத் துவக்கினார்.

‘நீயா நானா’ என்கிற இந்த டாஸ்க்கில் மூன்று தலைப்புகளில் விவாதம் என்கிற பெயரில் கூச்சல்கள் நடந்தன. இதன் நடுவர் மீராவாம். ஒரு நடுவருக்கான கம்பீரத்தில் நிகழ்வை இவரால் ஒருங்கிணைக்க முடியவில்லை. ‘ஏற்கெனவே ஏகப்பட்ட தகராறு.. இவங்க கூட மல்லுக்கட்டி இன்னமும் ஏன் அதை உயர்த்திக்கணும்’ என்று நினைத்தாரோ என்னமோ, அவர்களின் கூச்சல் விளையாட்டில் தானும் இணைந்து கொண்டு விவாதத்தை சொதப்பினார். (கோட்டு கோபிநாத்தோட கஷ்டம் இப்பவாவது புரியதா?!)

முதல் தலைப்பு – இந்த வீட்டின் சுத்தம் செய்யும் அணி உண்மையாக வேலை செய்கிறார்களா அல்லது வேலை செய்வது போல் பாசாங்கு செய்கிறார்களா?

“இந்த வீட்டின் க்ளீனிங் டீமின் சேவையை கமலே பாராட்டிட்டாரு. பிக்பாஸ் வரலாற்றிலேயே கண்ணாடியையெல்லாம் யாரும் துடைச்சதில்லை. எங்க சேரன் அண்ணா அதை செஞ்சு சான்றிதழ் வாங்கிட்டாரு. பின்பு எதுக்கு இந்த வீண் விவாதம்.. ஆட்டத்தைக் கலைங்கப்பா” என்று பிதாமகன் விக்ரம் பாணியில் தர்ஷன் முதல் வாதத்தைக் கொளுத்திப் போட அது நன்கு பற்றிக் கொண்டது.

“க்ளீன் பண்ண ஒரு பொண்ணைக் கூப்பிட்டோம். அது பாட்டுக்கு தூங்கிட்டே இருந்தது. வரவேயில்லை” என்று நடுவரின் கையைப் பிடித்து இழுத்தார் சரவணன். “தண்ணீரைச் சேமிக்கறதுக்குத்தான் நாங்க துணி துவைக்கறதில்லை” என்று சேரனின் குற்றச்சாட்டை மறுத்து நன்கு காமெடி செய்தார் கவின். தர்ஷன் அணி வென்றதாக மீரா அறிவிக்க “ஆமாம். உன் மேலேயே தப்பு இருக்கு.. பின்னே எப்படி ‘பாசாங்கு செய்கிறார்கள்” என்று நீ தீர்ப்பு சொல்வே?” என்று மீராவை ஜாலியாக போட்டுக் கொடுத்தார் சாண்டி.

IMAGE_ALT

அடுத்ததுதான் விவகாரமான (‘விவாகரத்தான’ என்றும் சொல்லலாம்) தலைப்பு. ‘இந்த வீட்டில் சிலருக்கு இருப்பது நட்பா அல்லது அதையும் தாண்டி புனிதமானதா?’

முதலில் எழுந்த முகின் ‘நாங்க.. இங்க நட்பாத்தான் இருக்கோம்” என்று சொல்ல அபிராமியின் முகத்தில் இமயமலை அளவிற்கு எரிமலை தெரிந்தது. “பொண்ணு பார்க்க வாங்க –ன்னுலாம் இங்க சொல்லியிருக்காங்க” என்று சரவணணைப் போலவே நடுவர் மீராவின் கையைப் பிடித்து இழுத்தார் மதுமிதா. “ஆனால் தர்ஷன் அதை நட்புன்னு சொல்லிட்டாரே” என்று குழாயடிச் சண்டை பாணியில் பேசி தங்கள் அணிக்கு பலம் சேர்க்க முயன்றார் ரேஷ்மா.

இப்படியொரு முக்கியமான தலைப்பில் கவின் பெயர் அடிபடாமல் இருந்தால் எப்படி? கேள்வியின் நாயகன் அவர்தானே? எனவே அவரையும் இழுத்தார்கள். “கவின் நாலு பொண்ணுங்களை ரூட்டு விட முயன்றாலும் அந்தப் பொண்ணுங்க இது ‘நட்புதான் தம்பி. நாலு பொண்ணுங்களை ரூட் விடறது நம்ம கலாசாரம் கிடையாது’ன்னு புரிய வெச்சாங்க” என்று சந்தடி சாக்கில் கவினின் தலையில் ஒரு லாரி மண்ணைக் கொட்டினார் சேரன். ஆனால் அவர் ‘நட்பைப்’ பற்றி பேசி சேம்சைட் கோல் போட்டார்.

ஒரு தலைப்பில் பேசி ஜெயிக்க வேண்டுமென்பதற்காக எதை வேண்டுமானாலும் உளறி விடும் பட்டிமன்ற கலாசாரம் இங்கும் வெளிப்பட்டது.

“நான் எப்போதும் நட்பிற்குத்தான் முக்கியத்துவம் தருவேன். இங்கயும் அதைத்தான் செய்யறேன்” என்று வழக்கம் போல் குட்டையைக் குழப்பிய கவின் “ஆனா சில பேரு ப்ரெண்டு மாதிரி இல்ல. சட்டுன்னு கோச்சிட்டு போயிடறாங்க. அது பத்தி எனக்குத் தெரியல’ என்று சொல்ல சாக்ஷியின் முகத்தில் ஒரு டைம்பாம் அமைதியாக காத்திருந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட கவின் “நாங்க எங்களுக்கு கொடுத்த டாப்பிக்லதான் பேசியாகணும். அதைப் புரிஞ்சுக்கோங்க” என்று சமாதான செய்தியையும் உடனே அனுப்பினார். (யப்பா.. டேய்.. நீ பயங்கர கேடிடா!).

“யாரு கிட்ட என்ன உறவு இருக்குன்னு தெளிவா சொல்லிடணும். அப்பதான் பிரச்சினை வராது. இப்ப தெளிவா சொல்லிடுங்க” என்று கவினுக்கு லொஸ்லியா கிடுக்கிப்பிடி ஒன்றைப் போட “சம்பந்தப்பட்டவங்க கிட்ட இதை தெளிவாப் பேசிட்டேன்’ என்று மறுபடியும் எஸ்கேப் ஆனார் கவின்.

“எனக்கும் முகினுக்கும் இடையில் இருப்பது நட்பை விடவும் மேலானது. இது நட்பா புனிதமான்றது அவங்க அவங்களுக்குத்தான் தெரியும்” என்கிற பொது அறிவிப்பை வைத்தார் அபிராமி. ஆனால் முகின் இதை ஒரு மாதிரியாக மறுத்தார். “என்னைப் பொறுத்தவரை இது நட்பாத்தான் போயிட்டு இருக்கு” என்கிற மாதிரி மழுப்ப அபிராமியின் முகத்தில் எரிமலையின் உக்கிரம் அதிகமாகியது. “நட்புன்னா உண்மையா இருக்கணும். அதுல ஏமாத்து வேலை இருக்கக்கூடாது” என்று காட்டமானார் மோகன். அவரின் கோபம் கவின் குறித்ததாக இருக்கலாம். இறுதியில், ‘நட்பு’ அணிக்குச் சாதகமாக தீர்ப்பு தந்தார் நடுவர் மீரா.

தங்களின் அந்தரங்கமான விஷயங்களைப் பற்றி பெண்கள் துணிச்சலாக பொதுவில் பேச முன் வரும் போது ஆண்கள்தான் மழுப்போ .. மழுப்பு… என்று குட்டையைக் குழப்புகிறார்கள்.

**

அடுத்த தலைப்பு. பிக்பாஸ் வீட்டில் மக்கள் பார்க்க விரும்புவது ‘வாய்ப்பேச்சில் வல்லவர்களையா? ‘மெளன குருக்களையா?”

முதலில் எழுந்த சரவணன் “நான்லாம் கண்ணாலேயே பேசுவேன். ‘நச்’சுன்னு ரெண்டே வார்த்தைல சொல்லிடுவேன். எனக்கென்று தனி ரசிகர்கள் இருப்பார்கள்” என்றார். “பேசினாத்தான் வேலையாகும். பேச வேண்டிய நேரத்துல பேசியாகணும். அதிகமா பேசற சாண்டியைத்தான் கமல் பாராட்டினார்” என்று கவுண்ட்டர் கொடுத்தார் மதுமிதா. (வனிதா போனவுடனே அம்மணிக்கு நிறைய தைரியம் வந்துடுச்சு). “இதே சாண்டிதான் மகனின் பிறந்தாள் அன்னிக்கு பேச முடியாம தவிச்சார்” என்று மொக்கையான பாயிண்டை முன்வைத்தார் சரவணன்.

“சிறைக்குப் போக வேண்டிய சூழல் வந்த போது. பொதுவாக மெளனமாக இருக்கும் சரவணன் அன்று துணிச்சலாக பேசியதால்தான் சிறைக்குப் போகாமல் தப்பித்தார்” என்று சரியான பாயிண்டை முன்வைத்தார் சேரன்.

‘பிரபலமானவர்களைத் தவிர இங்கிருக்கும் புதிய முகங்கள் பேசினால்தான் மக்களிடம் போய் சேர முடியும்” என்றெல்லாம் அவர் தொடர்ந்தது நன்று. ஆனால் ‘மெளனத் திரைப்படங்கள்.. பிறகு பேசும் திரைப்படங்களாக மாறியது” என்றெல்லாம் தனது அணிக்கு வலு சேர்க்க முயன்றது தொடர்பில்லாதது. அவருக்குள் இருக்கும் சினிமா டைரக்டர் தேவையில்லாமல் வெளிப்பட்ட நேரம் அது.

“ரெண்டு அணியுமே நல்லாப் பேசினாங்க” என்று நடுவில் நின்று பேசி ஒருவழியாக விவாத மேடையை முடித்து வைத்தார் நடுவர் மீரா.

** பட்டிமன்றம் முடிந்தவுடன் இரண்டு உக்கிரமான விவாதங்கள் சென்று கொண்டிருந்தன. இரண்டையும் மாற்றி மாற்றி உற்சாகமாகக் காட்டிக் கொண்டிருந்தது பிக்பாஸ் டீம். (இதற்குத்தானே ஆசைப்பட்டோம்?!)

ஒன்று - அபிராமிக்கும் முகினுக்கும் இடையில் நடந்தது. அதற்கு முன் இன்று காலையில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி சொல்லியாக வேண்டும். நால்வர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் முகினின் மீது காலைத் தூக்கிப் போட்டார் அபிராமி. பக்கத்தில் இருந்த கவினுக்கு தன் ‘காதல் கெத்தை’ காட்ட வேண்டிய அவசியம் அவருக்கு இருந்திருக்கலாம். ஆனால் இந்தச் செய்கைக்கு முகின் மெல்லிய ஆட்சேபம் தெரிவிக்க, கோபித்துக் கொண்டு எழுந்து சென்றார் அபிராமி. ஆனால் கவினைப் போல சமாதானம் செய்ய பின்னாலேயே முகின் ஓடவில்லை. ‘கெடக்குது கழுத..’ என்பது போல் அமைதியாக உட்கார்ந்து விட்டார். இதைப் பற்றி சற்று நேரம் கழித்து இருவரும் தனிமையில் பேசி சற்று சமாதானம் ஆனார்கள்.

IMAGE_ALT

மேலும் விவாதத்திலும் ‘நட்பு’ பற்றி முகின் பேசியதால் அப்செட்டாக இருந்த அபிராமி ‘என்னதான் விவாதம் என்றாலும் தொடர்பில்லாம ஏன் பேசற?” என்று முகினை வம்பிற்கு இழுத்தார். “மத்தவங்க கிட்ட எப்படியோ.. உன் கிட்ட மட்டும் பேசாம இருக்க முடியாது” என்பது போல் சொல்லி இருவரும் சமாதானத்திற்கு வந்தார்கள்.

‘நட்புதான்னு முகின் சொன்னவுடனேயே அபிராமி முகத்தைப் பார்க்கணுமே?” என்று கழிப்பறை அருகில் உற்சாகமாக மற்றவர்களைப் பற்றி வம்பு பேசிக் கொண்டிருந்தார் ரேஷ்மா.

இரண்டாவது விவாதம் – லொஸ்லியாவிற்கும் கவினுக்கும் இடையில். “நான் உன்கிட்ட பிரெண்டாத்தான் பழகறேன். ஆனா உனக்கும் சாக்ஷிக்கும் இடையில் இருப்பது என்னவென்று எனக்குத் தெரியாது. நேற்றுதான் சில விஷயங்கள் தெரிய வந்தது. உங்களுக்கு இடையில் எந்தப் பிரச்சினையும் வர நான் விரும்பவில்லை. சாக்ஷிக்கு பிரச்சினையில்லைன்னா உன் கிட்ட பேசறேன். இல்லைன்னா ஒதுங்கியிருக்கேன்” என்று தன் நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்தார் லொஸ்லியா.

IMAGE_ALT

ஆனால் இந்த துல்லியத்தை தனது முந்தைய நடவடிக்கைகளிலும் தெளிவாக இவர் வெளிப்படுத்தியிருக்கலாம்.

கவினுக்கும் சாக்ஷிக்கும் இடையில் ‘ஏதோ’ ஓடிக் கொண்டிருக்கிறது என்பது பார்வையாளர்களாகிய நமக்கே தெளிவாகத் தெரியும் போது அங்கேயே குடியிருக்கும் லொஸ்லியாவிற்குத் தெரியாது என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. எப்படியோ.. இப்போதாவது அவர் தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது நன்று.

IMAGE_ALT

“சாக்ஷி கிட்ட அப்படியொரு possessivess எனக்கு தோணினது உண்மைதான். உடனே அவ கிட்ட இதை தெரிவிச்சிட்டு ‘எதுவா இருந்தாலும் இந்த ஷோ முடிஞ்சவுடனே பார்த்துக்கலாம்’ன்னு சொல்லிட்டு பிரெண்டாத்தான் பழகறேன்” என்று லொஸ்லியாவிற்கு பதில் தந்தார் கவின். இதற்கு என்ன பொருள்? காமிராக்களின் முன்னால் எதையாவது செய்து மாட்டிக் கொள்ளக்கூடாது என்கிற ஜாக்கிரதையுணர்ச்சியா?

எனவே இந்தப் பஞ்சாயத்து பின்னர் சாக்ஷியிடமும் தொடர்ந்தது. ‘நீ என்கிட்ட பழகினது.. கையைப் பிடிச்சது.. இதெல்லாம் வெறும் நட்புதானா.. கோப்பால்..?” என்று டென்ஷன் ஆனார் சாக்ஷி. ‘வெளில போய்ப் பார்த்துக்கலாம்-ன்னு சொல்றே... எல்லாப் பொண்ணுங்க கூடயும் இப்படித்தான் பழகுவியா.. இனி என் பக்கம் வராதே” என்று சாக்ஷி சூடானார்.

இப்போது கவினின் நிலைமை ‘வட போச்சே’ என்பது கூட அல்ல. ‘வடைகள் போச்சே’ என்பதுதான்.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE